நீட் தேர்வாக இருக்கட்டும், மொழித் திணிப்பாக இருக்கட்டும், மாநில உரிமைகளாக இருக்கட்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உரிமைகளாக இருக்கட்டும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் இந்தியாவில் எழக்கூடிய முதல் எதிர்ப்புக்குரல் ஸ்டாலின் குரல்தான்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரியமில்லாத பழனிச்சாமி அரசு எப்படி உள்ளாட்சியில் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்ற திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார். பல பகுதிகளில் அவர் பிரசாரத்தில் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டப்பேரவை தேர்தலைவிட பாராளுமன்றத் தேர்தலை விட மிகவும் முக்கியமானது. இதற்குக் காரணம் உள்ளாட்சி பிரதிநிதிகள்தான். அவர்கள்தான் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நீங்கள் அளிக்கும் கோரிக்கைகளையும் அவர்கள்தான் எம்.எல்.ஏ., அமைச்சர்களிடம் கொண்டு சென்று நிறைவேற்றுவார்கள். எனவே, உள்ளாட்சி பிரதிநிதிகளை சரியானவர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் உள்ளாட்சியில் நல்லாட்சி தொடரும். 

எங்கு சென்றாலும் பெண்கள்தான் அதிகமாக வருகிறார்கள். ஏனென்றால், இந்த ஆட்சி அமைந்தப் பிறகு பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை ஸ்டாலின் செய்துகொடுத்திருக்கிறார். பேருந்தில் பெண்களுக்கு, மூன்றாம் பாலித்தனவருக்குக் கட்டணம் கிடையாது. ஆட்சி பொறுப்பேற்ற அன்றே அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டவர் ஸ்டாலின். அதேபோல அரசுப் பணிகளில் 40 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு என்ற நிலையை உருவாக்கித் தந்திருக்கிற ஆட்சி திமுக, கொரோனா பொதுமுடக்கக் காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் மிக மோசமாகப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தோம். வேலை கிடையாது. எந்தக் குடும்பத்தைப் பார்த்தாலும் கொரானாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என்ற சூழல் இருந்தது.

நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு கொரோனாவை கட்டுப்படுத்தி, தடுப்பூசி எந்த அளவுக்கு மக்களுக்கு செலுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு செலுத்தி, இன்று மக்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சூழலை திமுக ஆட்சி உருவாக்கியிருக்கிறது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு காப்பீடு திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற உதவிக்கரத்தை நீட்டிய ஆட்சியும் திமுகதான். யாருக்கு என்னத் தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு முன்னாலேயே அதை செய்துக்கொடுக்ககூடிய ஆட்சிதான் ஸ்டாலின் ஆட்சி. அதேபோல தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க முதல்வர் தயங்குவதில்லை. 

அது நீட் தேர்வாக இருக்கட்டும், மொழித் திணிப்பாக இருக்கட்டும், மாநில உரிமைகளாக இருக்கட்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உரிமைகளாக இருக்கட்டும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் இந்தியாவில் எழக்கூடிய முதல் எதிர்ப்புக்குரல் ஸ்டாலின் குரல்தான். தமிழகத்தின் முன்னேற்றத்திலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு, இன்று இந்தியாவிலேயே மற்ற மாநிலங்கலைவிட முதலீடுகளைக் கொண்டு வந்திருக்கிற, தொழில் முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிற மாநிலம் என்ற சிறப்பை திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சியில் சிறப்பாக அதிமுக அரசு செயல்பட்டு வந்ததாக சொல்லி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே தைரியமில்லாத பழனிச்சாமி அரசு எப்படி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும்? அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் ஊழல் நடந்திருக்கிறது. அதுபோன்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தென் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து தொழில்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருக்கிறார். ஆனால், எதுவுமே செய்யாத எடப்பாடிபழனிசாமியை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். அவருக்கு திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை” என்று கனிமொழி விமர்சித்தார்.