‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். பாஜக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் மத்திய அரசு செவி சாய்க்காது. இங்கே உள்ள மாநில அரசுதான் விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி தெரிந்தும் தெரியாமல் உள்ளனர்.


எப்படி விமான சேவை, ரயில் சேவை திட்டங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைய வைத்தார்களோ அதேபோல விவசாயத்திலும் நுழைக்க முயற்சி நடந்துவருகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து விவசாயிகளை நான் சந்தித்து வருகிறேன். இந்த வேளாண் சட்டம் எங்களுக்கு தேவையில்லை என்றே விவசாயிகள் என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.
திமுகவுக்கு செல்லுமிடமெல்லாம் மக்களின் வரவேற்பு உள்ளது.  மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தை வைத்து 800 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பேசத் தொடங்கினாலே மக்கள் விழிப்பாக கேட்கிறார்கள். மத்திய அரசு பொதிகை தொலைக்காட்சி மூலம் சமஸ்கிருத மொழியை திணிக்க முயல்கிறது. ஏற்கனவே இந்தியை திணிக்க முயன்றார்கள். அதோடு குலக்கல்வித் திட்டத்தையும் திணிக்க முயன்றார்கள். இதெல்லாம் தமிழகத்தில் எடுபடவில்லை. எனவே வருகிற தேர்தலில் இவற்றுக்கெல்லாம் மக்கள் பதிலளிப்பார்கள். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது . ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்.