வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  நீலகிரி,  கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. (7-1-2021) மற்றும் (8-1-2021) தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

( 9-1-2021) தமிழகம் புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்  கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,  உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.(10-1-2020) அன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில்  தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பதிவாகியுள்ளது. கேளம்பாக்கம், செங்கல்பட்டு 21 சென்டி மீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தாம்பரம்(செங்கல்பட்டு) தலா 16 சென்டி மீட்டர் மழையும். எம்ஜிஆர் நகர் (சென்னை) 15 சென்டி மீட்டர் மழையும், சோளிங்கநல்லூர் (சென்னை) டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 14 சென்டி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) பூவிருந்தவல்லி (திருவள்ளூர்)  தரமணி (சென்னை) சென்னை விமான நிலையம் (சென்னை) தலா 3 சென்டிமீட்டர் மறையும் பதிவாகி உள்ளது. 

ஜனவரி 6,7 தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே  மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.