தற்போதுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகளே புதிதாக உருமாற்றம் அடைந்துள்ளார் வைரஸையும் எதிர்த்து போராடும் என ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் வளர்சிதை மாற்றம் அடைந்து புதிதாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் அந்நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போதுள்ள தடுப்பூசிகள் மூலமே புதியவகை வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இதுவரை உலக அளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது. உலக அளவில் இதுவரையில்  17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது.  இந்தப் பட்டியலில் பிரிட்டன் 6வது இடத்தில் உள்ளது, இந்நிலையில் பிரிட்டனில் திடீரென கொரோனா உருமாற்றம் அடைந்து அந்நாட்டு மக்கள் மத்தியில் வேகமாக பரவிவருகிறது. இது கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பரவுவதாகவும் அஞ்சப்படுகிறது. 

இது மீண்டும் ஒட்டு மொத்த உலக நாடுகளையுத் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  புதிதாக உருமாறிய இந்த வைரஸ் ஏற்கனவே இருந்த வைரஸை காட்டிலும் 70% வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் மிக கொடூரமானதாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் தெற்று இங்கிலாந்து பகுதியில் வேகமாக பரவி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கடந்த நவம்பர் மாதம் பிறழ்வு பெற்றதாகவும் அது தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது எனவும் கடந்த செப்டம்பரில் இது ஒரு நோயாளிக்கு தென்பட்டது எனவும், இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை விஞ்ஞானிகள் இதை கண்டறிந்தனர் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கடந்த சில நாட்களுக்கு முன்னரே இங்கிலாந்து, அமெரிக்கா போன்று நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பது ஒட்டுமொத்த ஆராய்ச்சியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒருவேளை தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகளால் இந்த புதியவகை வைரசை எதிர்த்து செயல்படகூடாமல் போகுமோ என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதற்கிடையில் மாடர்னா தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு பொருள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. ஸ்புட்னிக்-வி  தடுப்பூசி ரஷ்யாவில் பயன்பாட்டில் உள்ளது,  இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவுவதால் தற்போதைய (பைசர்) தடுப்பூசிகள் பலனளிக்காமல் போகலாம் என்ற கருத்து பரவலாக நிலவி வந்தன. இந்நிலையில் ஒட்டுமொத்த உலகுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்  ஜென்ஸ் ஸ்பான், கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே (பைசர்) தற்போதைய புதிய கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர்,  தற்போது வரை நமக்கு கிடைத்த தகவலின்படி புதிய வகை வைரஸை பயன்பாட்டிலுள்ள  தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என ஜெர்மனியின் பொதுச் சுகாதாரத் துறை விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.