தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தலில் நடிகர் ரஜினி தொடங்க உள்ள கட்சி போட்டியிடுமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. இந்நிலையில் ரஜினி அரசியல் வருகை குறித்து பழ. கருப்பையா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

 
 “1996-ம் ஆண்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவை படுமோசமாக தோற்கடித்தார்கள். ஆனால், மீண்டும் முதல்வராக ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்கள். அதேபோல கருணாநிதியைத் தோற்கடித்த மக்கள், மீண்டும் முதல்வராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்படியென்றால் இந்த இரு கட்சிகளையும் தவிர்த்து வலிமையான பெரிய கட்சி இல்லை என்பதே இதற்குக் காரணம். இந்த இரு கட்சிகளையும் அகற்ற சின்னச்சின்ன கட்சிகள் முயற்சித்தன. ஆனால், முயற்சி  பலனளிக்கவில்லை. எனவே, வலிமை வாய்ந்த ஒரு கட்சியால்தான் இரு கட்சிகளையும் அகற்ற முடியும்.


வலிமையான கட்சி இருக்குமானால், இரு கட்சிகளையும் அகற்றிவிட முடியும். அப்படி வந்தவர்தான் எம்.ஜி.ஆர். அதே வலிமை ரஜினிக்கும் இருக்கிறது. அவர் ஒன்றைச் சொன்னால் கடைக்கோடி தமிழனுக்கும் அவருடைய கருத்து போய் சேரும். காங்கிரசை எம்.ஜி.ஆரால் அகற்ற முடிந்ததுபோல ரஜினியால் திமுக, அதிமுகவை அகற்ற முடியும்.” என்று பழ.கருப்பையா தெரிவித்தார்.