Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்ட அந்த கட்சி அழிந்து போகும் - அமமுக-வுக்கு சாபம் விட்ட மனோஜ்பாண்டியன்...

party started against AIADMK will be destroyed - Manojpandian
party started against AIADMK will be destroyed - Manojpandian
Author
First Published Apr 12, 2018, 9:32 AM IST


 
திருநெல்வேலி

அ.தி.மு.க.விற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள அந்த கட்சியும் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) அழிந்து போகும் என்று அதிமுகவின் அமைப்பு செயலாளர் பி.எச்.பி. மனோஜ்பாண்டியன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடந்தது. 

இதற்கு வழக்கறிஞர் அணித் தலைவர் பீர்மைதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெனி, இணை செயலாளர் மணிகண்டன், மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் திருமலையப்பன் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், "அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் திறமையானவர்கள், வழக்கறிஞர்களை தான் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்கும். அ.தி.மு.க.வில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மரியாதையும், பதவியும் கட்டாயம் கிடைக்கும். வழக்கறிஞர்களுக்கு அரசு பதவிகள் கிடைக்கும். 

அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும். கட்சியில் இளம் வழக்கறிஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். 

நான் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை மீட்க வாதாடும்போது, இந்த இயக்கத்தில் உண்மையான தொண்டர்கள் உள்ளனர். அவர்களை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறினேன்.

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறவர்களும், துரோகம் செய்கிறவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். 

அ.தி.மு.க.விற்கு எதிராக தொடங்கப்பட்ட அனைத்து கட்சிகளும் அழிந்துவிட்டன. அதுபோல் தற்போது அ.தி.மு.க.விற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள அந்த கட்சியும் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) அழிந்து போகும். அந்த கட்சியை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், இளைஞர் பாசறை இணை செயலாளர் சின்னத்துரை, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஜெரால்டு (மாநகர்), இ.நடராஜன் (புறநகர்), 

தலைவர் ஏ.கே.சீனிவாசன், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங்சுவாமிதாஸ், முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், சூப்பர்மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர். 

கூட்டத்தின் இறுதியில் வழக்கறிஞர் பரமசிவன் நன்றித் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios