மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார். தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகனையும் சந்தித்து ஆசி பெற்றார். 

முன்னதாக மெரினா கடற்கரையில் இருக்கும் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காலையில் இருந்து சிஐடி காலனியில் இருக்கும் அவரது வீட்டில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கனிமொழிக்கு தமிழில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவரது ட்விட்டரில், 'தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன். தாங்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றி  நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பீர்கள் என நம்புகிறேன்', என்று பதிவிட்டுள்ளார்.