மக்கள் நலக் கூட்டணியில் இருந்து  விலகி திமுக கூட்டணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் வைகோ இம்முறை திருச்சி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சியில் நீண்ட காலமாக முடங்கிக்கிடக்கும் மன்னார்புரம் மேம்பாலம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ராணுவ இடத்தை வழங்குவது தொடர்பாக அண்மையில் மத்திய அரசுக்கு வைகோ அரசுக்கு கோரிக்கை விடுத்தார். உள்ளூர் பிரச்சினைக்காக வைகோ கோரிக்கை விடுத்தது திருச்சியில் அவர் போட்டியிட விரும்புவதைக் காட்டுவதாகவே அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திமுக சார்பில் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள வைகோ, மதிமுக கட்சியைத் தொடங்கியதற்கு பிறகு 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் சிவகாசி தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார். 2004-ம் ஆண்டுவரை நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்த வைகோ, அதன்பிறகு எம்.பி.யாக முடியவில்லை. 2009-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியிலும், 2014-ல் பாஜக கூட்டணியிலும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வைகோ தோல்வியடைந்தார். 

இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ, மீண்டும் விருதுநகர் தொகுதி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், விருதுநகரில் வைகோ போட்டியிடுவதற்கான எந்த முணுமுணுப்பும் விருதுநகர் மதிமுக வட்டாரத்தில் நிலவவில்லை. மாறாக, திருச்சியில் மதிமுக வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த முறை திருச்சியில் போட்டியிட வைகோ விரும்புவதாக தகவல் கசிய தொடங்கியிருக்கிறது. 2004-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிட்ட எல். கணேசன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2009, 2014 என இரண்டு முறை விருதுநகரில் வைகோ தோல்வியடைந்ததால், அந்தத் தொகுதியில் மீண்டும் நிற்பது பலவீனமாகிவிடும் என்ற வைகோ கருதுவதாக மதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அந்தத் தொகுதிக்கு மாற்றாக, திருச்சி சரியாக இருக்கும் என்றும் வைகோ நினைப்பதாகக் கூறுகிறார்கள் அக்கட்சியினர். 

கடந்த காலங்களில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் (1998, 1999), தலித் எழில்மலை (2001), எல்.கணேசன் (2004) ஆகியோர் திருச்சியில் வெற்றிபெற்றதை சாதகமாக வைகோ பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் அண்மை காலத்தில் வைகோவின் நிகழ்ச்சிகள் திருச்சியை மையமாக வைத்து திட்டமிடப்படுகின்றன. தொடர்ந்து திருச்சி நகரில் வைகோ முகாமிட்டு வருகிறார். 

திருச்சியில் நீண்ட காலமாக முடங்கிக்கிடக்கும் மன்னார்புரம் மேம்பாலம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ராணுவ இடத்தை வழங்குவது தொடர்பாக அண்மையில் மத்திய அரசுக்கு வைகோ அரசுக்கு கோரிக்கை விடுத்தார். உள்ளூர் பிரச்சினைக்காக வைகோ கோரிக்கை விடுத்தது திருச்சியில் அவர் போட்டியிட விரும்புவதைக் காட்டுவதாகவே அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் திருச்சி இடம் பெற்றால், அது வைகோவுக்காகத்தான் இருக்கும் என்று அடித்து சொல்கிறார்கள் மதிமுகவினர்.