ஆரணியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பாமக, தேமுதிகவினர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வாழ்வு, சாவுக்கு கூட வராத சிட்டிங் எம்பி சேவல் ஏழுமலைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரணி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், கண்ணன் அல்லது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், மீண்டும் சேவல் வெ.ஏழுமலைக்கு சீட் வழங்கியது தொகுதி முழுவதும் எதிர்ப்பலை வீச தொடங்கியுள்ளதாக அக்கட்சியினரே பேச தொடங்கியுள்ளனர். ஏழுமலை மீது ஏராளமான புகார்களை அக்கட்சியினர் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். 

அதேபோல் ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட போளூரில் செஞ்சி ஏழுமலைக்கு அதிமுகவினர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இவர் தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. நன்றி சொல்லக்கூட வரவில்லை. கட்சியினர் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. கட்சியினர் வாழ்வுக்கும், சாவிற்கும் கூட வராதவருக்கு எப்படி வாக்களிக்க முடியும்? பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் என்ன சொல்லி வாக்கு கேட்க முடியும். கட்சி பதவியில் இருந்தும், எம்பியாக இருந்தும் எதுவும் செய்யாதவருக்கு மீண்டும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் ஆரணியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக வேட்பாளர் ஏழுமலையுடன் பாஜக, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் மட்டுமே மேடையேறினர். ஆனால் பாமக, தேமுதிக தரப்பில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.

ஆனால் அதிமுக தரப்பில் முறையான அழைப்பு இல்லாத காரணத்தினால் தேமுதிக மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்தனர். இந்த மேடையிலே தாம் செய்தது தவறுதான் என்னை மன்னிச்சிருங்க என்று கூறினார். அப்படி இருந்த போதிலும் ஆரணி தொகுதியில் அதிமுக படுதோல்வி அடைவது உறுதி'' என அக்கட்சியினர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.