நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி யார், தொகுதிகள் எவை என்பதையெல்லாம் முடிவு செய்யும் முன்பே தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கும் தேதியை அதிமுக அறிவித்திருக்கிறது.

ஆளும் அதிமுக கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைப் பெறும் தேதியை அறிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், பிப்., 4 முதல், 10 வரை, தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். விண்ணப்பக் கட்டணம், 25 ஆயிரம் ரூபாய் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதா இருந்தவரை, எந்தத் தேர்தல் வந்தாலும், அதற்கான பணிகளை விரைவாகத் தொடங்கிவிடுவார். கூட்டணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிமுகவில் பணிகள் தொடங்கிவிடும். போட்டியிட விரும்புவோரும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனுக்களைப் பெற்றுசெல்வார்கள். ஆனால், தற்போது ஏற்கனவே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பில் குழு அமைத்துவிட்ட நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்களை பெறும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதனால், அதிமுக கூட்டணி தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதுபற்றி அதிமுக தரப்பில் விசாரித்தபோது, “தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட கட்சி தலைமை காய் நகர்த்தி வருகிறது. கூட்டணி அமையும்பட்சத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக, எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும்.

 

எந்தத் தொகுதி என்பது பேச்சுவார்த்தைக்கு பிறகே தெரியும் என்பதால், எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை தயார் செய்து வைப்பதற்காகவே முன்கூட்டியே மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.” என்று தெரியவந்தது. என்றாலும், தொகுதிகளை முடிவு செய்த பிறகு மனுக்கள் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்ற முணுமுணுப்பும் அதிமுகவில் கேட்காமல் இல்லை.