2 ஜி, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் மத்திய அரசு யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் தமிழகத்துக்கு வந்த பாஜக தலைவர் அமித்ஷா , நாட்டிலேயே ஊழல் அதிகம் மலிந்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என கடுமையாக  குற்றம்சாட்டினார். இதற்கு ஆளும் தரப்பிலிருந்து பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார், அவர் அப்படி கூறியிருக்க மாட்டார், அவரது பேச்சை மொழி பெயர்த்த  எச். ராஜாதான் தவறாக மொழி பெயத்திருப்பார் என  சப்பைக்கட்டு கட்டினார்.

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கமாக உள்ளது என்பதற்காக தமிழக அரசை அமித்ஷா குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊழலுக்கு எதிராக பேசி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

உதாரணமாக 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட வழக்குகளில் பாஜக அரசு யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த தம்பிதுரை , திராவிட இயக்கத்தை தேசிய இயக்கத்தால் அழிக்க முடியாது என கூறினார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என தமிழகத்தின் உரிமைகளை மத்தியில் ஆள்பவர்கள் பறிக்கிறார்கள் என குறிப்பிட்ட துணை சபாநாயகர்,  தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறும் மத்திய் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதை தடுக்க என்ன கோரிக்கை விடுத்தார் என கேள்வி எழுப்பினார்.