மக்களவை தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளராக திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார். ஆதரவு கேட்டு மு.க.அழகிரியைச் சந்திப்பேன். ஆதரவு கேட்பேன் என்று எழுத்தாளர் சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 
என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் என்னை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சந்திப்பதில் தவறொன்றுமில்லை. மக்களவை தேர்தலில் அப்படி ஆதரவு கேட்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.