நிர்வாகிகளுடனான சந்திப்பு நிறைவடைந்த பிறகு மக்களை நேரில் சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பிரேமலதா தொடங்கினார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் இன்னும் பிற அணி நிர்வாகிகள் கூட்டம் என கடந்த 15 நாட்களாக அவர் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். 

தற்போது மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் சந்திக்கும் பணியை பிரேமலதா தொடங்கியுள்ளார். அதாவது மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர், பேரூராட்சி செயலாளர் என ஒரு மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரையும் வரவழைத்து அவர்களுடன் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பு நிறைவடைந்த பிறகு மக்களை சந்திக்க பிரேமலதா திட்டமிட்டுள்ளார். 

ஒரு மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வீதம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சுமார் 3 மாதங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரமாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்தி தே.மு.தி.க பக்கம் தமிழக அரசியலை ஈர்க்கவே பிரேமலதா இந்த முடிவை எடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒரு மாவட்டத்திற்கு 5 கிராமங்களை தேர்வு செய்து அங்கு மக்களை நேரில் சந்திக்க உள்ளார். 

இதன் மூலம் தே.மு.தி.க நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுடன்  தே.மு.தி.க மீது மக்களுக்கும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்று பிரேமலதா நினைக்கிறார். இதற்காகவே தற்போது முதலே பணத்தை செலவிடும் பணியை தே.மு.தி.க தலைமை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.