வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா. தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர். திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராக இருக்கிறார். மறைந்த கருணாநிதி உயிரோடிருந்த போது அவரை அன்பாக அப்பா என்று அழைத்தவர்தான் இந்த தமிழன் பிரசன்னா. அப்பா என்று அழைத்ததை கருணாநிதியின் குடும்பத்தார் யாரும் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. 

ஆனாலும், கருணாநிதி மறைவு வரைக்கும் தமிழன் பிரசன்னா அவரை அப்பா என்றே அழைத்து வந்துள்ளார். திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவை அடுத்து, அவரது உடல் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும்போது தொண்டர்கள் கதறி அழுதனர். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் கண்கலங்கினார். ஆனால், தமிழன் பிரசன்னாவோ, கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் தமிழன் பிரசன்னா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். திமுக தலைமைக்கு, தமிழன் பிரசன்னா நெருக்கமாகவே இருந்து வருகிறார்.

 

அந்த செல்வாக்கு, தமிழன் பிரசன்னாவுக்கு பல வகையில் உதவிகரமாகவே இருந்து வந்துள்ளது. அதை வைத்து நிறையவே சாதித்தும் வந்துள்ளாராம். இந்த நிலையில், சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு, செய்தியாளர்கள் இருவர் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த பேராசிரியை, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் செய்தியாளர்கள், விசாரணைக்கு அழைத்துள்ளனர். இது குறித்து தமிழன் பிரசன்னாவுக்கு செய்தியாளர்கள் தகவல் அளித்ததன் பேரில் இந்த விஷயத்தில் பிரசன்னா ஈடுபட்டாராம்., அதாவது, திருமங்கலம் காவல் ஆய்வாளருடன் போனில் பேசிய தமிழன் பிரசன்னா, பேராசிரியை விவகாரத்தல் சட்டப்படி நடவடிக்கை வேண்டாம் என்றும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் செய்தியாளர்கள் கைது செய்யப்படாமல் இருக்க அண்ணா அறிவாலயத்தின் பெயரை தமிழன் பிரசன்னா பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. இந்த நிலையில்தான், வரும் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை திமுக தலைமை இன்று அறிவித்தது. அந்த பட்டியலில் தமிழன் பிரசன்னாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திமுக பொறுப்பாளராக பி.என்.பி.இன்பசேகரன் மற்றும் தமிழன் பிரசன்னா அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்டப்பஞ்சாயத்துக்களில் தமிழன் பிரசன்னா சிக்கியிருந்தாலும், அவருக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பு ஸ்டாலின் கொடுத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.