கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வரை விருப்ப மனு அளித்தனர். ஆனால் தற்போது வெறும் 1700 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 10-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் இணைந்த விருப்ப மனு விநியோகத்தை துவக்கி வைத்தனர். இதனால் அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்த வந்த நூற்றுக்கணக்கானவர்கள் விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வாங்கிக் சென்றனர்.

 

ஆனால் அதற்கு அடுத்த நாளில் இருந்து விருப்ப மனு விநியோகம் காற்றாட ஆரம்பித்தது. முதல் நாளிலேயே கூட மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் தங்கள் சொந்த பணத்தை கொடுத்தே சிலரை விருப்ப மனு தாக்கல் செய்ய வைத்தனர். மற்றபடி வழக்கமாக அ.தி.மு.கவினர் ஆர்வத்துடன் விருப்ப மனு பெற வந்ததை போல் அன்று முதல் கடைசி நாளான நேற்று வரை யாரும் வந்து தாக்கல் செய்ததாக தெரியவில்லை., அமைச்சர்களின் பினாமிகள், உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள் போன்றோர் தான் அ.தி.மு.க விருப்ப மனுவை வாங்கிச் சென்றனர். 

இதுவும் கூட அமைச்சர்களுக்கு கட்சி மேலிடம் கொடுத்த நெருக்கடியின் எதிரொலியாகவே பார்க்கப்பட்டது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வென்று எம்.பியானவர்கள் கூட இந்த முறை விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. அதே சமயம் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சுமார் 4500 பேர் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். இவர்களில் சுமார் 1500 பேர் ஜெயலலிதாவிற்காக விருப்ப மனு அளித்தவர்கள். அப்படியே பார்த்தாலும் கூட சுமார் 3 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். 

ஆனால் இந்த முறை வெறும் 1710 பேர் மட்டுமே அ.தி.மு.க சார்பில் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதற்கு காரணம் கூட்டணி குறித்த தெளிவின்மை, பா.ஜ.க உடன் கூட்டணி என்று வெளியான தகவல் என்றே சொல்லப்படுகிறது. மேலும் ஜெயலலிதா இருந்த போது வேட்பாளரானால் போது மாவட்டச் செயலாளர் அந்த வேட்பாளைர வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும். ஆனால் தற்போது அப்படி ஒரு சூ’ழல் இல்லை. எனவே தான் அ.தி.மு.கவில் விருப்ப மனு தாக்கல் செய்ய பெரிய அளவில் யாருக்கும் ஆர்வம் இல்லை என்கிறார்கள்.