pannerselvam supporting edappadi
அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அணிகள் இணைவதற்கு, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், கட்சியில்இருந்து சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை வெளியேற்றினால் மட்டுமே இணைவதற்கான பேச்சு வார்த்தை நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனை விதித்தனர்.
இதையடுத்து, டிடிவி.தினகரன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் கைது செய்தனர். இதில், ஜாமீன் பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் வெளியே வந்துள்ளார்.

சென்னை வந்த டிடிவி.தினகரன், “இரு அணிகளும் இணைவதாக கூறியதால், நான் விலகுவதாக அறிவித்தேன். ஆனால், அவர்கள் இணைவதற்கான எந்த முடிவும் தெரியவில்லை. இதனால், கட்சியை நானே வழி நடத்துவேன் என்றார்.
இதற்கிடையில், டிடிவி.தினகரனுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். அதற்கு, டிடிவி.தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று முதல் 30 எம்எல்ஏக்கள், டிடிவி.தினகரனை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வருகின்றனர்.

ஏற்கனவே 12 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். 122 எம்எல்ஏக்களை வைத்து, எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார். இந்த வேளையில், எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, அங்கு செல்வதால் 3வது அணி உருவாகும் நிலை உள்ளது. இதனால், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழும் என பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் அதிமுக ஆட்சி எக்காரணத்தை கொண்டும் கவிழாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஏற்கனவே எலியும், பூனையுமாக இருந்த இரு அணியினரும், தற்போது டிடிவி.தினகரனுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதால் இணையும் நிலை உள்ளது. திடீரென இபிஎஸ்ஸுக்கு, ஓபிஎஸ் முட்டு கொடுப்பதால், அதன் பின்னணியில் என்ன நடந்துள்ளது என லட்சக்கணக்கான கேள்விகள் எழுந்துள்ளது.
