பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநரிடம் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது;- எதிர்கட்சியினர் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போய் விடும். ஆட்சி கலைந்து விடும் நாம் முதல்வராக ஆகிவிடாலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது ஒருபோதும் நிறைவேறாது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும் அராஜகத்தில் ஈடுபடும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்று ஓபிஎஸ் கூறினார். 

இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த ஓபிஎஸ் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து தமிழக ஆளுநரை தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது என்றார். மாதிரி வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடியால் மறுவாக்குப்பதிவு என தேர்தல் ஆணையமே கூறிவிட்டது. மேலும் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், நடக்க இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக மாபெரும் வெற்றிபெறும். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்து மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செய்துள்ளனர். அவரது வழியிலான தற்போதைய எடப்பாடி அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து வருவதோடு, கூடுதல் திட்டங்களையும் மக்களுக்கு அளித்து வருகிறது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.