panneerselvam under surveillance
ஆட்சி பழனிசாமிக்கு.. கட்சி பன்னீர்செல்வத்துக்கு என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் இருவரின் அணிகளும் இணைந்தன.
முதல்வராக பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் இருக்கின்றனர். இரு அணிகளும் இணைந்து தினகரனை ஓரங்கட்டினர். தற்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் பழனிசாமி தரப்பும் தினகரன் தரப்பும் இறங்கியுள்ளது.
இதற்கிடையே, பன்னீர்செல்வம் தரப்பை முதல்வர் பழனிசாமி புறக்கணிப்பதாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை எனவும் பேச்சு அடிபட்டது. ஆட்சி மட்டும் போதாதென்று கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முதல்வர் பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.
பழனிசாமியின் புறக்கணிப்பால் பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்கிடையே பிரதமரைச் சந்திக்க சென்ற பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் தங்கமணியை அனுப்பிவைத்தார் முதல்வர் பழனிசாமி.
பிரதமருடன் பன்னீர்செல்வம் தனியாக அரசியல் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை உறுதி செய்வதற்காகவும் ஸ்பையாக அனுப்பப்பட்டார் தங்கமணி. ஆனால் பிரதமரைச் சந்திக்க செல்லும்போது அமைச்சர் தங்கமணியை கழற்றிவிட்டு தனது ஆதரவாளரான மைத்ரேயனை மட்டுமே அழைத்து சென்றார் பன்னீர்செல்வம்.
இதனால் பழனிசாமி அதிருப்தி அடைந்தார். எனினும் பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நகர்வுகளைக் கண்காணிக்க உளவுத்துறைக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வத்தின் நகர்வுகள் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உளவுத்துறையின் கண்காணிப்பை அறிந்த பன்னீர்செல்வம், அதற்கேற்றாற்போல் ரகசியமாக மேற்கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் வெல்வாரா பழனிசாமி? முயற்சியை முறியடிப்பாரா பன்னீர்செல்வம்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது.
