தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவடைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் இல்லாமலேயே உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் பல பணிகள் முடங்கி கிடக்கின்றன.

இதனால் உள்ளாட்சி பணிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை பணிகள் நடந்துவருகின்றன. இதை காரணம் காட்டியே உள்ளாட்சித் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், இன்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் குறித்து குறிப்பிட்டார். அப்போது, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்த பின்புதான் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 172.27 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வார்டு மறுவரையறை பணிகள் எவ்வளவு காலத்துக்குள் முடியும் என தெரிவிக்கவில்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் மேலும் காலதாமதம் ஆகலாம் என்ற நிலையே உள்ளது.