Panneerselvam is acting selfishly
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பழனிசாமி அணியினரை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என பிரிந்தது. அதாவது ஒரே கட்சி இருண்டு குழுக்களாக செயல்பட்டு வந்தது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். தொகுதி மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஆர்.கே. நகர் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா அணிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்துவதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது.
அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதற்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்., அணிகள் இணைப்பால் செய்வதறியாது திணறியது டிடிவி தினகரன் என்றே கூறலாம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை, எடப்பாடி அணி தங்கள் பக்கம் இழுப்பதை தவிர்ப்பதற்காக, 19 எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கர்நாடகாவில் உள்ள குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் ஆதரவாளர்களில் ஒருவரான ஜக்கையன் எம்எல்ஏ, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 ஆக குறைந்தது. சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டிசுக்கு விளக்கமாளிக்காததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசியல் பரபரப்பு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. எடப்பாடி அணி மீது தினகரன் அணியும், தினகரன் அணி மீது எடப்பாடி அணியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுயநலத்துடன் மட்டுமே செயல்படுபவர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பழனிசாமி அணியினரை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் தினகரன் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்றும், வேட்பாளர் யார் என்பதை சசிகலாதான் முடிவு செய்வார் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
