இன்று ஜெயலலிதாவுக்கு ஓராண்டு நினைவு நாள்! பெரும்பான்மையை இழந்தும் பி.ஜே.பி.யின் கருணையால் ஓடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசின் இரு முதல்வர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூச்சநாச்சமில்லாமல் இந்த ஆட்சியை ‘அம்மாவின் ஆட்சி’ என்கிறார்கள் என்று வெம்புகிறான் தொண்டன்.

அடுத்தவர் தயவில் பிழைப்பதா அம்மாவின் ஆட்சி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுனாமி போல் விஸ்வரூபமெடுத்து தர்மபுரி, கன்னியாகுமரி தவிர மற்ற அத்தனை தொகுதியிலும் வெற்றியை வாரிச்சுருட்டி வழங்கிய பெண் சிங்கம் அம்மா!ஒரு முறை ஆட்சியை பிடிப்பதே குதிரைக்கொம்பான நிலையில் இரண்டாவது முறையாய் ஆட்சியை தக்க வைத்துக் கொடுத்தவர். அப்பேர்ப்பட்டவரின் ஆட்சி பெரும்பான்மையை உட்கட்சி கலவரத்துக்கு காவு கொடுத்துவிட்டு ’இது அம்மாவின் ஆட்சி’ என்று பேசுவது இழுக்கு! என நோகும் தொண்டர்கள், ‘இவர்கள் அம்மாவுக்கு செய்த துரோகத்திலேயே பெரிது இன்னமும் அவரது நினைவிடத்துக்கு வரைபடம் கூட தயார் செய்யாததுதான் என பொங்குகிறார்கள். 

அம்மா 2016 டிசம்பர் 5-ல் இறந்தார். மறுநாள் தலைவர் சமாதிக்கு அருகில் அவரை அடக்கம் செய்தார்கள். அம்மாவுக்கு 15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படுமென அப்போது முதல்வராக இருந்த பன்னீர் சொன்னார். அரசாணையும் வெளியிட்டார். அவ்வளவுதான், அவ்வளவேதான். அதன் பிறகு அந்தப் பணி குறித்து மூச்சே இல்லை. இதன் பிறகு பதவி இழந்து, தர்மயுத்தம் நடத்தி பின் மீண்டும் பதவியை பெற்றிருக்கும் பன்னீர் அப்படியே அதிகாரத்தில் செட்டிலாகிவிட்டாரே தவிர நினைவு மண்டபத்தை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. இரண்டு முதல்வர்களும் தங்களின் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளதான் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கோயமுத்தூரை சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசாங்கத்தை நோண்டி எடுத்திருக்கிறார். அதில்தான் இந்த அவலம் வெளியே தெரிந்திருக்கிறது. அம்மாவின் நினைவிடம் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதா? எந்த தேதியில் அது வெளியிடப்பட்டது? எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்றிருக்கிறார்கள்? யாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்றெல்லாம் அவர் கேட்டதற்கு ‘இல்லை’ என்று ஒரு வார்த்தையை மட்டுமே பதிலாக தந்துள்ளார்கள். 

நினைவு மண்டபம் அமைப்பதற்கு வரைபடம் தயாராகிவிட்டதா? ஆம் எனில் அதன் நகலை கொடுங்கள்..என கேட்டதற்கும், ‘இல்லை’ என்று பதில் தந்துள்ளார்களாம். 

நினைவிடம் கட்ட 15 கோடியை ஒதுக்கியும் கூட இதுவரையில் ஒரு கல்லை கூட இவர்கள் அதற்காக எடுத்து வைக்காதது அம்மாவின் மேல் இவர்களுக்கு இருக்கும் விசுவாசத்தை காட்டுகிறது! 
நினைவிடம் மட்டுமில்லை சட்டமன்றத்தில் அம்மாவின் உருவப்படத்தை திறக்க தேதி கேட்டு பிரதமருக்கு எடப்பாடி கடிதம் மே மாதம் எழுதியிருந்தாராம். அதில் ஜூலை  மாதத்தில் ஓர் தேதியை வேண்டியிருந்திருக்கிறார். அந்த ஜூலை முடிந்து டிசம்பரே பிறந்து அம்மாவின் நினைவு நாளும் வந்தாச்சு. ஆனால் இதுவரையில் உருவப்படம் திறப்பது குறித்து எந்த பேச்சும் இல்லை. இத்தனைக்கு அந்த கடிதம் எழுதிய பிறகு பிரதமரை எடப்பாடியும், பன்னீரும் சில முறை நேரிலேயே சந்தித்துவிட்டார்கள். தங்களின் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள பிரதமரிடம் ஏதெயெல்லாமோ பேசுபவர்கள் ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பு பற்றி ஒரு முடிவை எடுக்க கேட்காதது ஏன்? என்று நறுக்கென கேட்டிருக்கிறார் லோகநாதன்...என பொங்கும் தொண்டர்கள், போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக்கப்படும் என்று அறிவித்ததும் கூட ஒரு கேம்தான். இதுவரையில் அது குறித்து ஒரு அரசாணை கூட வெளியிடப்படவில்லையே! 

ஆக இவர்கள் அம்மா! அம்மா! என்று சொல்வதெல்லாம் சும்மா!...என்று ஆதங்கமாய் கூறியிருக்கிறார் லோகநாதன். அவர் சொன்னது சரிதான். அம்மாவை சும்மாவாக்கிவிட்டார்களே பழனியும், பன்னீரும்! என்று பொங்குகிறான் தொண்டன்.