கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தவே புதிய நிர்வாகிகளை அதிமுக அம்மா அணி பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளதாக எம்.எல்.ஏ. பழனியப்பன் கூறியுள்ளார். மேலும், கட்சி தொண்டர்கள் விருப்பத்தின்போடிய டிடிவி தினகரன் முடிவுகளை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை தீவிரமாக ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அண்மையில் டி.டி.வி.தினகரன் திடீரென்று எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்களை பல்வேறு பதவிகளில் நியமனம் செய்தார்.

ஆனால், டிடிவி தினரகன் அறிவித்த பதவி தேவையில்லை என்று பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், பழனி மற்றும் பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு ஆகியோர் கூறினர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ. கதிர்காமு, டிடிவி தினகரன் அளித்த பதவியை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், அதிமுக பொது செயலாளர் சசிகலா கூறினால், தனக்கு அளிக்கப்பட்ட புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ. பழனியப்பன், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தவே புதிய நிர்வாகிகளை அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளதாக கூறினார்.

சென்னை, அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரனை சந்தித்தப்பின் எம்எல்ஏ பழனியப்பன், செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தவே புதிய நிர்வாகிகளை டிடிவி தினகரன் நியமித்துள்ளார் என்றார்.

கட்சி தொண்டர்கள் விருப்பத்தின்படியே துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் முடிவை அறிவித்துள்ளதாகவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும் எம்.எல்.ஏ. பழனியப்பன் கூறினார்.