சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவே மீண்டும் வெற்றிபெறும். மீண்டும் தமிழக முதல்வராக பழனிசாமியே பொறுப்பேற்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தையல் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம் நடந்தது. அப்போது, பேசி அமைச்சர் செங்கோட்டையன்: தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார். பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியாவில் முதன் முதலாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா தான். 

பொங்கல் திருநாளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.2,500 பரிசுத்தொகையை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதைப்பார்த்து திமுக வியந்து போயுள்ளது. சர்க்கரை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரிசி கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

தமிழகம் அமைதியான மாநிலமாகவும், மின்வெட்டே இல்லாத மாநிலமாகவும், அனைத்து கட்டமைப்புகளும் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. இதனால், அனைத்து முதலீட்டாளர்களும் தமிழகத்கில் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் கொள்கையாக உள்ளது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.