palanisamy plan to stop purchase alcohol from midas to tasmac

சசிகலாவின் மிடாஸ் மதுபான ஆலையிலிருந்து டாஸ்மாக்கிற்கு செய்யப்படும் கொள்முதல் ஏற்கனவே குறைந்துவிட்ட நிலையில், தற்போது நடந்துவரும் வருமான வரி சோதனையைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக மிடாஸிலிருந்து கொள்முதலையே நிறுத்திவிட முதல்வர் பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வருமான வரி சோதனை:

கடந்த நான்கு நாட்களாக சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உதவியாளர்கள், சசிகலா, தினகரனின் வழக்கறிஞர்கள், ஜோதிடர் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானவரி அதிகாரிகள், சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் சோதனை நடத்திவருகின்றனர். மிடாஸ் மது ஆலையிலிருந்து பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோடி கோடியாக குவித்த மிடாஸ்:

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடி கோடியாக குவிந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் ஆலையிலிருந்துதான் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அனைத்து வகையான மதுபானங்களும் மிடாஸிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டதால் கோடி கோடியாக மிடாஸ் கல்லா கட்டியது.

ஆனால் ஜெயலலிதா மறைந்தபிறகு நிலைமை மாறத் தொடங்கியது. பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியிலிருந்து விலக்கிவைத்தனர். அதனால் சசிகலாவின் மிடாஸ் ஆலையிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கருதினார். ஆனால், அதற்கு சில அமைச்சர்கள் ஒத்துழைக்கவில்லை. 

கொள்முதல் குறைப்பு:

எனவே மிடாஸிலிருந்து டாஸ்மாக்கிற்கான கொள்முதலை குறைத்தார். தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் உட்பட 11 ஆலைகளிடமிருந்து 48 லட்சம் மதுபான பெட்டிகள் ஒரு மாதத்திற்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. இதில், 12 லட்சம் பெட்டிகள் மிடாஸ் ஆலையிடமிருந்து வாங்கப்பட்டு வந்தநிலையில், அந்த எண்ணிக்கையை 7 லட்சம் பெட்டிகளாக முதல்வர் பழனிசாமி குறைத்தார். அதிலும் கடந்த மாதம் 5 லட்சம் பெட்டிகள் மட்டும்தான் மிடாஸிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இப்படியே படிப்படியாக மிடாஸை ஒட்டுமொத்தமாக கைகழுவிவிடலாம் என முதல்வர் பழனிசாமி நினைத்தால், அதற்கு சில மூத்த அமைச்சர்கள் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. மிடாஸ் கொள்முதலை ஏன் நிறுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதனால், மிடாஸை கைகழுவுவது எப்படி என தெரியாமல் யோசித்துவந்த முதல்வர், அதற்கான சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

மிடாஸை மொத்தமாக கழற்றிவிட முடிவு:

இப்படியான நிலையில் தான், வருமான வரித்துறையின் சோதனை புயலில் மிடாஸ் மதுபான ஆலையும் சிக்கியது. எனவே வருமான வரி சோதனையை அடிப்படையாகக் கொண்டு மிடாஸிடமிருந்து டாஸ்மாக்கிற்கான கொள்முதலை மொத்தமாக நிறுத்திவிடலாம் என முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போதும்கூட.. சோதனை நடைபெறுவதால் ஏன் மிடாஸிடமிருந்து கொள்முதலை நிறுத்த வேண்டும்? என சில அமைச்சர்கள் கேள்வி எழுப்புவதாகவும், ஆனால் மிடாஸை கழற்றிவிடுவதில் முதல்வர் பழனிசாமி முடிவாக இருப்பதாகவும் தெரிகிறது.