தமிழ் உச்சரிப்பு அரசாணையை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளதற்கு பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறியுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே, ஆங்கிலத்தில் உச்சரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை, திரும்பப் பெறுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், நிபுணர்கள் உதவியுடன், தமிழ் உச்சரிப்புக்கேற்ப, சரியான ஆங்கில வார்த்தையை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

இரண்டு அல்லது மூன்று நாட்களில், புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி அரசு பல்டி அரசுஎன்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டரில்;- தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசு. முதலிலேயே வல்லுநர்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டாமா? ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே மேதைகளாக நினைத்துக் கொண்டார்களா? எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது! என பதிவிட்டுள்ளார்.