palanisamy and panneerselvam gap pudukottai mgr centenary function
முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் மீண்டும் இணைந்த நிலையிலும் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் விரிசல்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்று பேசப்படுகிறது. பெயரளவில் துணை முதல்வர் பதவியில் பன்னீர்செல்வம் இருந்தாலும் முழு அதிகாரமும் முதல்வர் பழனிசாமியிடமே இருப்பதாகவும் இதனால் பழனிசாமியின் மீது பன்னீர்செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையேயான விரிசலை உறுதிப்படுத்தியிருக்கிறது புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சொந்த மாவட்டத்தில் தனது செல்வாக்கை காட்டவேண்டும் என்பதற்காக விழாவிற்கு தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். துறை வாரியான சாதனை அரங்கம், கண்காட்சி என விழாவை பிரமாண்டமாக விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், பழனிசாமி அணியினருக்கும் பன்னீர்செல்வம் அணியினருக்கும் இடையேயான விரிசல் அம்பலமானது. நேற்று மதியம் புதுக்கோட்டைக்கு வந்த முதல்வர் பழனிசாமி, அரசினர் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு மதியம் 3 மணி அளவில் விழா மேடைக்கு வந்தார். அவரது ஆதரவாளர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் விழா மேடைக்கு சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகுதான் துணை முதல்வர் பன்னீர்செல்வம் விழா மேடைக்கு சென்றுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான், நகர செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர்.
முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் அவரவர் ஆதரவாளர்கள் தனித்தனியே வரவேற்பு கொடுத்தது அவர்களது ஆதரவாளர்கள் இன்னும் இணக்கமாகவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்தது.
அடுத்ததாக பேனர்கள்.. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை முழுவதும் பேனர்கள் ஆக்கிரமித்திருந்தன. பேனர்களில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
விஜயபாஸ்கரைப் பிடிக்காத பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், விஜயபாஸ்கரைப் புறக்கணித்து தனியாக பேனர்கள் வைத்தனர். அந்த பேனர் பன்னீர்செல்வத்தை பிரதானப்படுத்தியதாக இருந்தது.
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் படம் பெரியதாகவும் பழனிசாமியின் படம் சிறியதாகவும் இருந்தது. விஜயபாஸ்கரின் படம் அந்த பேனர்களில் இல்லை. இதைக்கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த பேனர்களை இரவோடு இரவாக அகற்றினார். ஆனால் அதற்கெல்லாம் அசராத ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த பேனர்களை மீண்டும் வைத்தனர்.
முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் மேல்மட்ட அளவில் இணைந்திருந்தாலும் கூட மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் இருக்கும் இருதரப்பின் நிர்வாகிகளும் இன்னும் இணக்கமாகவில்லை என்பதை அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் இணையாதது குறித்து பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். தான் பார்த்துக்கொள்வதாக பன்னீர்செல்வம் தெரிவித்துச் சென்றதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதிகாரப் பகிர்வு இல்லாமல் முழு அதிகாரத்தையும் பழனிசாமி தன்னகத்தே கொண்டுள்ளார் என்பதால் பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து பிரதமரை சந்தித்த பன்னீர்செல்வத்திடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, முதல்வரும் தானும் ஒன்றிணைந்து தான் செயல்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி மீது எந்த அதிருப்தியும் இல்லை என பன்னீர்செல்வம் பதிலளித்திருந்தாலும் இருவருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருவது புதுக்கோட்டை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் மூலம் அம்பலமாகியுள்ளது.
