ராமநாதபுரம் அருகே உள்ள கலுவூரணியில் தான் புதிதாக கட்டிய வீட்டின் தொடக்க விழாவிற்கு பழனி கடைசியாக வந்து சென்றுள்ளார். இந்நிலையில், சீனாவுடன் எல்லைப் பிரச்னை தொடங்கியதும் லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் பழனி ஈடுபட்டு வந்தார். சீனா வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கம் இடையே நடந்த சண்டையில் பழனி வீரமரணமடைந்திருக்கிறார். இந்த செய்தி தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போதைய சூழலில் புது வீட்டின் "பால்காய்ச்சும்" விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் விழாவை நீங்களே முன்னின்று நடத்திவிடுங்கள் எனக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் பழனி. சீனாவுடன் சுமுகப் பேச்சுவார்த்தை தொடங்கியதும் ராணுவத்தை திரும்பப்பெறும் சூழல் உருவானது. மூன்று தினங்களுக்கு முன் குடும்ப உறுப்பினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பழனி, மனைவியிடம் பேசியபோது, "சீனாவுடனான பிரச்னை குறையத் தொடங்கியுள்ளதால் யாரும் பயப்படவேண்டாம் என்றும், விரைவில் ஊருக்கு வந்துவிடுவேன்" எனவும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில், லடாக் பகுதியில் சீனாவுடன் நடைபெற்ற சண்டையில் பழனி உட்பட மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவம் இன்று காலை தெரிவித்தது. இதுகுறித்த தகவல் வெளியானதும் பழனியின் குடும்பத்திரனர் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.சொந்த வீடு கட்டி அதில் குடியிருக்க இருக்க வேண்டும் என்ற பழனியின் ஆசை கடைசிவரை நிறைவேறவில்லையே என அவரது மனைவி கண்ணீர் மல்க கதறி அழுத காட்சி, காண்போரையும் கண்கலங்க செய்தது.

பழனியின் சகோதரர் தமிழ்க்கனியும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பழனியின் உடல் சொந்த ஊரான கடுக்கலூருக்கு கொண்டு வரப்பட்டு, நாளை அல்லது மறுநாள் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.