அடுத்த விக்கெட்டை சாய்க்கும் எடப்பாடி !! அமமுகவில் இருந்து வெளியேறும் விஐபி !!
அமமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்ப அக்கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதிமுகவில் இணைவதா அல்லது திமுகவுக்கு போவதா என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வன் போன்றோர் அதிரடியாக திமுகவில் சேர்ந்தனர். இசக்கி சுப்பையா, புகழேந்தி போன்றோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து விட்டனர். டி.டி.வி.தினகரனுக்க வலதுகரமாக செயல்படடு வரும் வெற்றிவேலும் அதிமுகவுக்கு தூது விட்டு வருவாதாக அண்மைக் காலமாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நகரச் செயலாளர்கள், அதிமுக திமுக என சேரத் தயாராகிவருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் தினகரன் பெரிதாக எந்த கட்சி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எம்.ஜி.ஆர். பிறந்த தின பொதுக்கூட்ட அறிவிப்பு வெளியிட்டார். மற்றபடி அமைதியாகவே இருக்கிறார்.
இந்நிலையில் தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அதிமுகவுக்குப் போகிறார் என்ற செய்தி இப்போது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்கள் முன்பு பழனியப்பனின் அண்ணன் வெள்ளியங்கிரியை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார். அதேபோல் அமமுக பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமியிடமும் முதலமைச்சர் பேசி மனதை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது
இதையடுத்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிமுகவில் இணையத் தயாராகிவிட்டார் என சொல்லப்படுகிறது, அதே நேரத்தில் திமுகவினரும் செந்தில் பாலாஜி மூலம் பழனியப்பனிடம் பேசி வருவதாகவும் இது தொடர்பாக அவர் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.