திமுக சார்பில் தஞ்வாவூர் தொகுதிக்கு முள்ளாம் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மதியம் 12 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 10.30 மணிக்கெல்லாம் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர். ஆனால் 1 மணிக்குத்தான் வேட்பாளர் அங்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் எதிரே இருந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அவர் தனது நெற்றியில் விபூதி அணிந்திருந்தார். பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் ஒரு பெரியாரிஸ்ட் விபூதி வைத்திருந்ததை அங்கிருந்த திமுக தொண்டர்கள் கிண்டல் செய்தனர்.

அண்ணன் பழனிமாணிக்கம் நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறார். இதை அண்ணன் கவனத்தில் கொள்ள மறந்துவிட்டார்போல. அதோடு தந்தை பெரியார் புகழ் ஓங்குக என்றும் கோஷமிடுகிறார் என தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.

இதையடுத்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் வந்த வேட்பாளர் பழனிமாணிக்கம் மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரையிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தி.மு.க மாற்று வேட்பாளராக முன்னாள் அரசு வக்கீல் நமச்சிவாயம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.