மீண்டும் ஆட்சியை பிடித்து பிரதமர் நாற்காலியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் பாஜக, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், இங்கு பிரபல நட்சத்திரங்களை வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளது. 

வலிவாக இருந்த வடமாநிலங்களை கோட்டை விட்ட பாஜக, தற்போது தென் மாநிலங்களை குறிவைத்து வருகிறது. தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட மாநிலங்களில் முக்கியமானது ஆந்திரா. பாஜக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாராகி வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் பாஜக பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதிலிருந்து மீள பாஜக பலமான திட்டங்களை தீட்டி வருகிறது.

 

இந்நிலையில் பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸை தங்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். அத்தோடு ஆந்திரா மாநிலத்தில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸின் உறவினரான நடிகர் கிருஷ்ணம் ராஜூ பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 

அவர் ஆந்திரபிரதேசம், காக்கிநாடா தொகுதியில் இம்முறை போட்டியிடப்போவதாகவும், அவர் மூலம் பிரபாஸிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸ் அதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் தென்னிந்தியா முழுவதும் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீடு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.