இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம் நரவனே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்,  இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும்,  நாளையும் அமீரகத்தில் ராணுவ தளபதி நரவனே அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து உரையாற்றவுள்ளார்.அதைத் தொடர்ந்து தனது இரண்டாம் கட்ட பயண திட்டமாக 13ஆம் தேதி சவுதி அரேபியா சொல்ல உள்ளார். அங்கு இந்தியா-சவுதி இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

அப்போது இரு நாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் பரிமாறிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவதுடன் சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் இணக்கம் பாராட்டி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு  கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதாவது சவுதி அரேபியா தலைமையிலான முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அக்கோரிக்கையை சவுதி அரேபியா புறக்கணித்தது. 

இந்நிலையில் அந்நாட்டிற்கு இந்திய ராணுவ தளபதியின் பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சவுதி அரேபியா பயணம் மேற்கொள்ளவுள்ள ராணுவ தளபதி எம். எம் நரவனே அந்நாட்டு ராணுவ தலைமையகம் மற்றும் மன்னர் அப்துலஜீஸ் ராணுவ அகாடமி ஆகியவற்றிற்கு செல்வார் எனவும், அதேபோல் தேசிய பாதுகாப்பு பல்கலைகழகத்திற்கு செல்ல உள்ள அவர் அங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் சவுதி அரேபியாவுக்கு செல்லும் முதல் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி நரவனே என்பது குறிப்பிடதக்கது.  எனவே இது வரலாற்று சிறப்புமிக்க பயணம் என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.