நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை அதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா? ஆதரித்தார்களா? என்பது விடுகதையாக இருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்துள்ளார்.

மக்களவையில் கடந்த வியாழக்கிழமை முத்தலாக் மசோதா நிறைவேறிய நிலையில், நேற்று கடும் விவாதங்களுக்குப் பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மக்களவையில் அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரித்து பேசினார். ஆனால் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்களின் தலைவர் நவநீத கிருஷ்ணன் கடுமையான வகையில் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், வாக்கெடுப்பின்போது அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். இதனால், முத்தலாக் மசோதாவில் அதிமுக-வின் நிலை என்ன என்பது குழப்பமாகவே உள்ளது.
 
இந்நிலையில் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை. மசோதாவை அ.இ.அ.தி.மு.க கட்சியினர் எதிர்த்தார்களா? ஆதரித்தார்களா? என்பது விடுகதை! முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.