தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இரு மாநிலங்களிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக காங்கிரஸ் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் - திமுக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டாதது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிலிருந்தே தீயாய் வேலை செய்து வரும் அதிமுக தன்னுடைய கூட்டணியில் பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 சீட்டுக்களை கொடுத்து சரிகட்டிவிட்டது. ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸை திமுக மிகவும் கேவலமாக நடத்துவதாக நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கியதாக வெளியான தகவல்கள் விரிசலை அதிகரித்தது. 

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை முக்கிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸுக்கு திமுக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடிவெடுத்துள்ளது அதிருப்தியை அதிகரித்துள்ளது. 40 சீட்டுக்களுடன் தொடங்கிய பேரம் தற்போது படிப்படியாக குறைத்து 25 கொடுத்தாலும் சரி என்ற நிலைக்கு வந்ததுவிட்டது. இந்நிலையில் திமுகவுடன் நிச்சயம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டுமென காங்கிரஸ் மேலிடத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார். 

தமிழகத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானது எனத் தெரிவித்துள்ள சிதம்பரம், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரஸின் இடத்தை பிடித்து விடும்.ல் அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்க கூடாது என எச்சரித்துள்ளார். நாம் எதிலும் தவறான யுக்தியை கையாளக் கூடாது. காங்கிரசின் தவறான யுக்திகளால் பாஜக கைக்கு கர்நாடகம் சென்று விட்டது.  தமிழக காங்கிரசை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த தேர்தல் முக்கியமானது. எனவே காங்கிரசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.