இந்திய குடியரசை மீட்க மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டுமோ? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது: அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். அரசமைப்பின் ஆன்மா என்பது அதன் முன்றாவது தொகுதியில் உறுதி செய்யப்பட்டிருக்கும் சுதந்திரத்தில் இருக்கிறது. இப்படி வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை எந்த ஒரு அரசாலும் பறித்துவிட முடியாது. இந்த குடியரசு தின நாளில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் விசாரணை எதுவுமின்றி  6 மாதங்களுக்கும் மேலாக பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த அரசால் நூற்றுக்கணக்கானோர் மீது தேசதுரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்துள்ளது. இங்குள்ள ஒரு சிறு பகுதியில் உள்ளோருக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் மறு சுதந்திரம்  மறுக்கப்பட்டதாகத்தான் அர்த்தம். தேசியக் கொடியை ஏற்றுகிற இந்த நாளில் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் நாம் அதிகரிக்க வேண்டும். இந்தியா ஒரு குடியரசு, முடியரசு அல்ல. யாருக்கும் இங்கு முடி சூட்டவில்லை. 

 

யாரும் இங்கு மன்னரில்லை. பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரிக் குளறுபடி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவை ஒரு சர்வாதிகார அரசனின் நடவடிக்கைகளை நினைவு படுத்துகின்றன. இந்தியக் குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வேண்டுமோ? இந்திய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் என் வணக்கம்.

இவ்வாறு சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also Read: கம்பீரமாய் வந்த அய்யனார்..! தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..!