தனது ஆதரவாளராக இருந்து காங்கிரசில் வளர்ந்த கே.எஸ்.அழகிரி தற்போது தனக்கு எதிராகவே செயல்பட்டு வந்த நிலையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் பதவியை காலி செய்ய ப.சிதம்பரம் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பிரச்சனை திமுக – காங்கிரஸ் இடையிலான நான்கு ஆண்டுகால கூட்டணிக்கு வேட்டு வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்பட்டுள்ளது என்கிற ஒரே வார்த்தையால் கூட்டணிக்கே வேட்டு வைத்துள்ளார் கே.எஸ்.அழகிரி. வழக்கம் போல் இந்த விஷயத்தை திமுக பெரிதுபடுத்தாது என்று அழகிரி தப்பு கணக்கு போட்டுள்ளார்.

அதே சமயம் அழகிரி எந்த விஷயத்திலாவது மாட்டுவாரா? என்று ப.சிதம்பரம்  தரப்பு காத்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் ஒரு காலத்தில் கே.எஸ் அழகிரி ப.சிதம்பரத்தின் தீவிர கடலூரில் இரண்டு முறை அழகிரிக்கு எம்பி சீட் கிடைக்க ப.சிதம்பரம் தான் காரணம். ஆனால் ஒரு கட்டத்தில் ப.சிதம்பரத்திடம் இருந்து தனியாக விலகி வன்னியர் லாபி மூலம் காங்கிரஸ் மேலிடத்திடம் அவர் நெருங்கி தற்போது மாநில தலைவர் ஆகிவிட்டார்.

கே.எஸ்.அழகிரியை எப்படியாவது மாநில தலைவர் பொறுப்புக்கு வர விடாமல் தடுக்க ப.சிதம்பரம் தரப்பு தீவிரமாக முயற்சித்தது. ஆனால் அப்போது ராகுல் காந்தி, ப.சிதம்பரம் தரப்பு மீதிருந்த அதிருப்தி காரணமாக அழகிரியை தலைவர் ஆக்கினார். தனக்கு எதிராக ப.சிதம்பரம் காய் நகர்த்தியை தெரிந்தே நாடாளுமன்ற தேர்தலின் போது சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் மகனுக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்தார் அழகிரி.

அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போனது. கடுமையான அழகிரியின் லாபியையும் தாண்டி ப.சிதம்பரம் ஒரு வழியாக தனது மகனுக்கு அங்கு சீட் வாங்கினார். அப்போது முதலே இரண்டு தரப்புக்கும் எதிரான மோதல் வலுத்து வந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் அழகிரி வெளியிட்ட அறிக்கையை வைத்து அவருக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு காய் நகர்த்துகிறது.

கூட்டணியை விட்டு போனாலும் பரவாயில்லை என்று காங்கிரசை கடுமையாக போட்டுத் தாக்கி திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்திருந்தார். அந்த கட்சிக்கு ஓட்டு வங்கியும் இல்லை ஒன்றும் இல்லை என்று கூறி அதிர வைத்தார். இதற்கு அழகிரியே பதில் சொல்லாத நிலையில், துரைமுருகனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சீறியுள்ளார். காங்கிரஸ் தேவையில்லை என்பதை வேலூர் தேர்தலுக்கு முன்னரே ஏன் துரைமுருகன் சொல்லவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் மூலம் திமுகவுடனான மோதலை தீவிரப்படுத்தியுள்ளார் கார்த்தி சிதம்பரம். இப்படியான பேச்சுகள் மூலமாக திமுக உடனான உறவு முறிந்தால் அதற்கு காரணம் என்று அழகிரி தான் பலியிடப்படுவார். எனவே தான் இந்த விவகாரம் அப்படியே நமத்துப்போய்விடாமல் உயிர்ப்புடன் வைத்திருக்க ப.சிதம்பரம் தரப்பு காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள். இதற்கிடையே திமுகவை சமாதானப்படுத்த முடியவில்லை என்றால் பதவி விலகுமாறு அழகிரிக்கு காங்., மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.