தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்று அதிமுக எம்.பி. கூறியிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.

 
குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதா மீது ஏன் ஆதரவாக வாக்களித்தோம் என்பது குறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ‘தி ஹிந்து’வுக்கு அளித்துள்ள பதில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.  “இந்து ராஷ்டிரம் அமைக்க பாஜக விரும்புவதாகவும் தலைமைச் செயலக துணை செயலாளர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டதாகவும்” செய்தி வெளியானது.

 
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் அதிமுகவுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். ப.சிதம்பரம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஆதரித்ததற்கு அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது, கேலிக்குரியது. தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இதேபோல இன்னொரு ட்விட்டர் பதிவில், “இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' என்ற கேள்விக்கு என்ன பதில்? இலங்கைத் தமிழர்கள் என்றல்லவா அவர்களைப் பார்க்க வேண்டும்? அவர்களில் பெரும்பான்மையானவர் இந்துக்கள் என்பதை அரசு மறந்துவிட்டதா?” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.