106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் திஹார் சிறையிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியே வந்தார்.


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்டு 21 அன்று கைது செய்தது. பின்னர் இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 22 அன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் இருந்தார். அந்த வழக்கிலும் ஜாமீன் பெற ப. சிதம்பரம் முயற்சி செய்து வந்தார். ஆனால். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
டெல்லி உயர் நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 ப. சிதம்பரத்தை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அவரை ஜாமீனில் விடுவிக்கும் பணிகள் நடைபெற்றன. அந்தப் பணிகள் முடிந்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு மேல் ப. சிதம்பரம் சிறையிலிருந்து வெளியே வந்தார். 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் திஹார் சிறையிலிருந்து ப. சிதம்பரம் வெளியே வந்தபோது, அவரை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.