அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் முன்னிறுத்தப்படாததற்கான காரணம் குறித்து அக்கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு.. "தொண்டர்களை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம். அதன்படி, சோனியா, ராகுல் தான் தலைவர்களாக இருக்க முடியும்".என்று கூறியிருப்பது ப.சிதம்பரம் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பிரச்சினைகள், தலைவர் பதவியில் மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முதல்வர்கள் என 20 முக்கியத் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. அதில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை வெளிப்படையாக விமரிசிக்காதபோதிலும், கட்சியின் தலைமை மீது குறிப்பாகராகுல் காந்தி மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்பட்ட விஷயம் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதன்தொடர்ச்சியாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்து முடிந்துள்ளது.அதில், சோனியா காந்தியே தலைவராக தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் காட்டமாக தெரிவித்திருந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தரப்பினர் கூட்டுத் தலைமை வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வர வேண்டும் எனறும் குரல் கொடுப்பதாக தகவல் வெளியானதற்கு இடையே, காமராஜர் போன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம்,ஒரு ஆங்கில நாளிதழ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது.காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு ப.சிதம்பரத்துக்கு மறுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சோனியா', ராகுல் காந்தி' செய்த தியாகம் போன்று வேறு யாரும் காங்கிரஸ் கட்சிக்காக செய்யவில்லை. தொண்டர்களிடம் கேட்டால் யார் தலைவராக வேண்டும் என்பது தெரியும். தொண்டர்களை பொறுத்தவரை சோனியா, ராகுல் ஆகியோர்தான் தலைவராக வர வேண்டும் என்பார்கள். மற்றவர்கள் சொல்வதை கட்சியால் ஏற்றுக் கொள்ள முடியாது. தொண்டர்களை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம். அதன்படி, சோனியா, ராகுல் தான் தலைவர்களாக இருக்க முடியும்".

பாஜக காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு என ராகுல் காந்தி கூறியதாக வெளியான தகவல் பொய்யானது.மூத்த தலைவர்கள் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மூத்த நிர்வாகிகள் எழுதிய கடிதம் காரிய கமிட்டியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடிதம் எழுதிய சிலர் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். பதவிக்காக ஆசைப்படும் நபர்களை நம்பி காங்கிரஸ் கட்சி கிடையாது.