கலைஞர் மறைவை ஒட்டி ஆகஸ்டு 8 முதல் 14 வரை காங்கிரஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்த திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ளார்.  

இந்த அறிக்கையில், “ இந்தியத் திருநாட்டின் நிகரற்ற, ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ‘பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமென என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும், உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்கள் சார்பிலும் மத்திய அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் இவ்வரசு இதனை செய்யத் தவறினால் வருங்காலத்தில் ராகுல்காந்தி தலைமையில் அமையப் போகிற மத்திய அரசு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பாரத ரத்னா விருதை நிச்சயம் வழங்கி கௌரவிக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “தமிழக அரசும் சென்னை நகரின் ஒரு பிரதான சாலைக்கு டாக்டர் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அருமை அண்ணன் கலைஞர் அவர்களின் துணையோடு அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் நானும், நான் நிறுத்திய வேட்பாளர்களும் சிலமுறை வெற்றி பெற்றுள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 25 லட்சம் முதன் முறையாக என் வேண்டுகோளை ஏற்று அறிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் பெயரை என் வேண்டுகோளுக்கிணங்க ஏற்று சூட்டினார். மன்னரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தார். மணமேல்குடி தாலுகாவை உருவாக்கித் தந்தார். இப்படி அறந்தாங்கி தொகுதிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், தமிழக மக்களுக்கும் சட்டமன்றத்தில் நான் விடுத்த பல வேண்டுகோளை ஏற்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் அறிவித்தார்.

என் திருமணம் தொடங்கி என் இல்லத்து திருமணங்கள் அனைத்தையும் நடத்தி வைத்தார். ஏறக்குறைய 45 ஆண்டுகள் அண்ணன் கலைஞரோடு கட்சி பாரபட்சமின்றி நெருக்கமாக பழகிடும் வாய்ப்பை பெற்றிருந்தேன். இந்தியத் திருநாட்டின் மூத்த தலைவரும், உலகெங்கும் வாழ்கிற தமிழர்களின் உள்ளங்களில் வாழ்பவரும் என் இதயத்தில் நீக்கமற நிறைந்தவருமான அருமை அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பிலும், அறந்தாங்கி தொகுதி மக்களின் சார்பிலும் முழு திருவுருவ வெண்கலச் சிலை அறந்தாங்கியில் விரைவில் நிறுவப்படும்” என்று அறிவித்துள்ளார் திருநாவுக்கரசர்.