உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஓம், பசு உள்ளிட்டவை பற்றி பேசினால் ஒரு சிலர் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்து போகிறார்கள் என கிண்டலாக தெரிவித்திருந்தார்.

பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி, "நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை, வேலை வாய்ப்பின்மை குறித்து பேசாமல் ஓம், பசு உள்ளிட்டவை பற்றி பேசி பிரச்னைகளை பிரதமர் நரேந்திர மோடி திசை திருப்பிவருகிறார்.

ஒவ்வொரு நாளும் மசூதியிலிருந்து தொழுகை சத்தமும் கோயில்களிலிருந்து ஓம் சத்தமும் கிறிஸ்தவ தேவாலயங்களிலிருந்து பாசுரங்கள் பாடும் சத்தமும் கேட்கிறது. பன்முகத்தன்மைதான் இந்தியாவின் அழகு. ஆனால் மோடி பங்கேற்று பேசும் அனைத்து இடங்களிலும் ஒரே ஒரு மதத்தினை பற்றியே பேசிவருகிறார். விரைவில் அவர் அனைத்து மதங்களை பற்றி உயர்வாக பேசுவார் என எதிர்பார்க்கிறேன் என கூறினார்..

பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கிராமங்களில் கால்நடைகள் முக்கியப் பொருளாதாரமாக உள்ளது என்றார். ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்றார்.

மேலும், 10 லட்சம் இளைஞர்கள் வேலையிழந்துள்ளதாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துகொண்டே வருவதாகவும் கவலை தெரிவித்த ஓவைசி, இதற்கு மோடி பதிலளிக்காமல் ஓம், பசு என பிரச்னையை திசைதிருப்பி வருகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.