தமிழக அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என  ஊடகங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  அதாவது  வேலைவாய்ப்பு இயக்குனர் கழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்  தமிழக அரசு  ஊழியர்களில் 50 வயதை நிறைவு செய்தவர்கள், மற்றும் 30 ஆண்டுகள் பணியாற்றி நிறைவு செய்தவர்கள் குறித்து தகவல் கோரப்பட்டிருந்தது .

 இந்த தகவல் கேட்பு தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்காக தான் கேட்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து  சில ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது .  அதேபோல் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களும் இந்த தகவலை கூறி,  அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . இந்நிலையில் இது குறித்து தமிழக ஊடகங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை என மறுத்துள்ளது.  அத்துடன்  அரசு ஊழியர்களுடைய  சுகாதாரம் குறித்து புள்ளிவிவரத்தை  சேகரிக்கவே தகவல் கோரப்பட்டதே தவிர அரசு  ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்காக அல்ல எனவும் கூறியுள்ளது. 

 இது வழக்கமாக ஆண்டுதோறும் நடக்கும் கணக்கெடுப்புதான் எனவும்,  இதற்கும் கட்டாய ஓய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.  அத்துடன் அரசு ஊழியர்கள் ஓய்வு குறித்து ஆணையிட வேலைவாய்ப்பு துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு மட்டுமே அவ் அதிகாரம் உண்டு எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.