Our coalition will continue to run separately in the election
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடை தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, தேமுதிக உள்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேமுதிக சார்பில் மதிவாணன் கடந்த 3 நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். மற்ற கட்சியினர், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பகுதி செயலாளர் லோகநாதன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று காலை அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது
ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வேட்பாளர் லோகநாதனுக்கு ஆதரவாக தேசிய தலைவர்கள் சீதாராம் யெச்சூரி உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். மாற்று அரசியலை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்.
மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். மக்கள் நல போராட்ட களத்தில் எங்களது மக்கள் நல
கூட்டணி தொடர்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ அல்லது பணம் கொடுக்க முயற்சி செய்தாலோ தேர்தல் ஆணையம் நேரடியாக பிடிக்கும் பட்சத்தில் அந்த
கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
