இனி அதிமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது. திமுக எப்படி நடக்கு எதிரியோ, அதேபோல் அதிமுக நமக்கு துரோகி என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சி டெபாசிட் கூட வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். முக்கிய அக்கட்சியில் நம்பிக்கையாக நட்சத்திரமாக திகழ்ந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்தனர். இது டி.டி.வி.தினகரனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

இதனையடுத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த மாற்று கட்சியினர் அமமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா டிடிவி.தினகரன் தலைமையில் வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமமுகவில் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், ஆயிரக்கணக்கான மாற்றுகட்சியினர் அமமுகவில் இணைந்தனர். 

பின்னர், விழா மேடையில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களது வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுக எப்படி நமக்கு எதிரியோ, அதே போல் அதிமுக நமக்கு துரோகி என்றார். அம்மாவின் கொள்கைகளை தாங்கி நிற்கும் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திகழ்ந்து வருகிறது. சுயலாபத்திற்காக கட்சியை விட்டு சென்றவர்களால் சோர்வடையமாட்டோம்.  

தமிழக மக்கள் விரும்பாத, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உண்மையான தொண்டர்கள் அமமுகவில் தான் உள்ளனர். அதிமுகவினரும், திமுகவினரும் அமமுகவிலிருந்து ஆள்பிடிக்கும்வேலையில் ஈடுபடுகின்றனர். கட்சியை பதிவு செய்த பின் நிரந்தர சின்னம் பெற்று அனைத்து தேர்தல்களையும் சந்திப்போம். எதிர்காலத்தில் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறுவது உறுதி என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.