Order to Election Commission to conduct General secretary Elections for admk - AIADMK member case ...

மதுரை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று என மதுரை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவின் உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "நான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினராக உள்ளேன். இந்த கட்சி விதியின்படி தொண்டர்கள்தான் கட்சியின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். 

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுச்செயலாளர் மூலம்தான் செயல்படுத்த முடியும். கடைசியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்துவிட்டார்.

அதன்பின்னர், கட்சி விதிகளுக்கு முரணான வகையில் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே கட்சியின் பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் இல்லாமலேயே இரண்டு முறை நடத்தப்பட்டது. 

மேலும், அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது இரட்டை இலை சின்னத்தை பொதுச்செயலாளரிடம்தான் தேர்தல் ஆணையம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ஒப்படைத்ததும் தவறு. 

இதையெல்லாம் சுட்டிக்காட்டி உடனடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. 

எனவே, உடனடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது பற்றி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று நீதிபதி பாரதிதாசன் தெரிவித்தார்.