ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க, இரு அணிகளுமே, பேச்சுவார்த்தைக்கான குழுக்களை அமைத்து விட்டன.

ஆனால், முதல்வர், பொது செயலாளர் ஆகிய இரண்டுமே பன்னீருக்குதான் வழங்க வேண்டும் என்பதில், அவர் தரப்பு கறாராக இருக்கிறது.

இந்த விஷயம், ஏற்கனவே, அமைச்சர் ஜெயகுமாரிடம் சொன்ன பிறகுதான், பேச்சு வார்த்தை என்ற முடிவே எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரண்டு பதவியும் கேட்டால் எப்படி, எடப்பாடி முதல்வராக இருக்கட்டும். நீங்கள் துணை முதல்வராக தொடருங்கள், மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.

ஆனால், ஏற்கனவே தினகரனை வெளியேற்றியதாக  சொல்லப்பட்டதை டிராமா என்று கருதும் பன்னீர் தரப்பு, இப்போது அணிகளை இணைத்து விட்டு, பின்னர் தினகரனை கட்சியில் நுழைத்து விடுவார்கள் என்று நினைக்கிறது.

அதனால், பன்னீர் பொது செயலாளராக இருந்தால் மட்டுமே, தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவுகள் மீண்டும் கட்சியில், சேர்க்கமுடியாமல் தடுக்க முடியும்.

அத்துடன், பன்னீர்தான் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல்வர். எனவே, முதல்வர் பதவியை விட்டு கொடுக்க முடியாது என்றும், அவர்  தரப்பினர் கூறி வருகின்றனர். அதனால், அணிகள் இணைப்பில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், எதுவாக இருந்தாலும், அணிகள் இணைப்பை முடித்துவிட்டு பேசிக்கொள்ளலாம். அதனால், ஜெயலலிதா சமாதிக்கு வாருங்கள், இரு தரப்பும் கைகுலுக்கி இணைந்து விடலாம் என்று ஜெயக்குமார் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், ஒன்றரை கோடி தொண்டர்களும் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். அவர்கள் பக்கம் வெறும் 122 எம்.எல்.ஏ க்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். நம்மை வைத்து அவர்கள் நாடகம் நடத்த அனுமதிக்க கூடாது என்று பன்னீர் உறுதியாக சொல்லிவிட்டாராம்.

மேலும், அவர்கள் நம்மை தேடி வரட்டும். நாம் அவர்களை தேடி போக வேண்டாம் என்பதிலும் பன்னீர் உறுதியாக இருக்கிறாராம். 

அணிகள் இணைப்புக்கு எடப்பாடி தரப்பினர் காட்டும் அவசரமும், பன்னீர் இழுத்தடிப்பதையும் பார்த்தால், எங்கோ இடிக்கிறதே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.