ஜெயலலிதா மறைந்த பிறகு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார், சசிகலா முதலமைச்சராவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து விலகி தர்மயுத்தம் தொடங்கினார். பின்னர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் , டி.டி.வி.தினகரனை கழற்றிவிட்டு விட்டு இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என்றும், தன்னை  தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்றும் ஓபிஎஸ தரப்பில் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர்.

இதையடுத்து எடப்பாடி அரசை எப்படியாவது  கவிழ்த்த வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் முயன்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய  அமமுகவின் செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ் செல்வன், பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு  ஜூலை 12ல் கோட்டூர்புரம் இல்லத்தில் டி.டி.வி.தினகரனை ஓபிஎஸ் சந்தித்துப்  பேசினார் என்றும்,  சந்திப்பு நடந்த போது இருந்த சிசிடிவி காட்சிகளை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி அரசை கவிழ்ப்பது தொடர்பாக பேச வேண்டும் என தற்போது வரை டி.டி.வி.தினகரனிடம் ஓபிஎஸ் நேரம் கேட்டு வருகிறார் என்றும் தங்க தமிழ் செல்வன் கூறினார்.

திரை மறைவில் எங்களிடம் பேசும் ஓ.பி.எஸ், மேடையில் எங்களை  விமர்சிக்கிறார்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் இரட்டை வேடம் போடுவது ஏன்? எனவும்  தங்க தமிழ் செல்வன் கேள்வி எழுப்பினார். முடிந்தால் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரட்டும் எனவும் தங்க தமிழ் செல்வன் பகிரங்க சவால் விட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.