எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க டி.டி.வி தினகரனின் உதவியை கோர துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் முயற்சி மேற்கொண்டதாக தங்கதமிழ்செல்வன் கூறியிருப்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழக அரசியல் முழுக்க முழுக்க கருணாசை சுற்றியே வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கருணாசிடம் இருக்கும் கூவத்தூர் ரகசியம் தொடர்பான வீடியோ எப்போது வேண்டுமானாலும்  வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தி.மு.க தரப்பும் கூட கருணாசை எப்படியாவது உசுப்பேற்றி கூவத்தூர் ரகசியங்களை அம்பலப்படுத்த வண்டும் என்று கண் கொத்தி பாம்பாக காத்திக் கொண்டிருக்கிறது.

 

கூவத்தூர் ரகசியம் அம்பலம் ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படுவதுடன் தினகரனின் இமேஜும் ஒரே நாளில் காலியாகிவிடும் என்பது தான் தி.மு.கவின் கணக்காக உள்ளது. அதாவது கூவத்தூர் ரகசியம் என்பது எம்.எல்.ஏக்களிடம் நடைபெற்ற பேரம் மற்றும் அங்கு நடைபெற்ற வேறு சில அந்தரங்க விஷயங்கள் என்பது தான் என்று தி.மு.க நம்புகிறது. இந்த விவகாரங்கள் வெளியாகும் போது அதற்கு காரணமான சசிகலா மற்றும் தினகரனின் இமேஜூம் டோட்டலாக டேமேஜ் ஆகும் என்று தி.மு.க நம்புகிறது. 

மேலும் எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்கிற ரகசியமும் அம்பலம் ஆகும் பட்சத்தில் ஆட்சியை எளிதாக கவிழ்த்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று தி.மு.க கனவு கண்டு கொண்டிருக்கிறது. அதே சமயம் கூவத்தூர் ரகசியம் தொடர்பான தகவல்கள் தற்போது ஊடகங்களில் அடிபடுவதை தினகரன் தரப்பு சுத்தமாக விரும்பவில்லை.

ஏனென்றால் கூவத்தூர் ரகசியம் வெளியாகும் பட்சத்தில் அதனை எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்வதை விட தாங்கள் தான் அதிகம் எதிர்கொள்ள நேரிடும் என்று தினகரன் தரப்பு அஞ்சுகிறது. எனவே மக்களின் கவனத்தை மட்டும் அல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தையும் திசை திருப்ப ஓ.பி.எஸ் மீது அவதூறு பரப்புவது என்கிற முடிவுக்கு தினகரன் தரப்பு வந்துள்ளது. 

அதனால் தான் எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க தினகரனிடம் பேச ஓ.பி.எஸ் முயற்சித்ததாக தங்கதமிழ்செல்வன் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதாவது தினகரன் நண்பர் ஒருவர் மூலம் தினகரனுடன் பேச ஓ.பி.எஸ் முயற்சித்ததாக தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். அந்த நண்பர் யார் என்று தற்போது வரை அவர் தெரிவிக்கவில்லை. இதை எல்லாம் விட கடந்த ஆண்டு ஜூலை 12ந் தேதி ஓ.பி.எஸ் தினகரனை சந்தித்ததாகவும் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் தன்னுடன் இருக்கும் ஒரு சில எம்.எல்.ஏக்களை வைத்தே கவிழ்த்துவிட முடியும். 

மேலும் தற்போது தினகரன் தரப்பில் பெரிய அளவில் எம்.எல்.ஏக்களும் இல்லை. அப்படி இருக்கையில் எதற்காக ஓ.பி.எஸ், எடப்பாடி அரசை கவிழ்க்க தினகரன் உதவியை நாட வேண்டும் என்பது தான் அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது. இந்த கேள்வியில் லாஜிக்கும் உள்ளது. தங்கதமிழ்செல்வன் கூறுவதில் தான் லாஜிக்கே இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் தற்போது தினகரனுக்கு அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே பிரச்சனை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.