கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சசிகலா முதலமைச்சராக, அதிமுக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பன்னீர்செல்வம், தனி அணியை உருவாக்கினார்.
இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, 2 அணிகளாக செயல்வட்டு வருகிறது. இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சிறைக்கு சென்றார்.
இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், பதவி பிரமாணம் செய்து வைத்து, 15 நாட்களுக்குள் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை, அமைச்சர்கள் தங்களது கார்கள் மூலம் சட்டமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். அணியினர், ரிசார்ட்டில் அங்கிருந்த எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அந்த செல்போன்கள் அனைத்தும், எடப்பாடியின் ஆதரவாளர்களிடம் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 10 நாட்களாக எம்எல்ஏக்களிடம் பறிக்கப்பட்ட செல்போன்கள், இன்று காலை அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதை வாங்கிய எம்எல்ஏக்கள், ஆன் செய்து வைத்தனர். இந்த நேரத்தில், எம்எல்ஏக்களை, ஓ.பி.எஸ். அணியினர் தொடர்பு கொண்டபோது, ஒலிக் தொடங்கியது.
இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில், தங்களதுஅணிக்கு வெற்றி நிச்சயம் என சந்தோஷம் அடைந்துள்ளனர். உடனே, எதிர் முனையில், பேசியதாகவும் தெரிகிறது. தற்போதுவரை ஒ.பி.எஸ் அணிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களுக்கு மேலும் 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதும் என கூறுகின்றனர்.
நேற்று இரவு கூவத்தூர் ரெசார்ட்டில் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அருண்குமார் தப்பித்து வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கூறி கோவை பெரியநாயக்கம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
