பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது ஓபிஎஸ் தனது குடும்பத்துடன் போய் விஸ்வாசத்தை வெளிப்படுத்தினார். 

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான ஆலோசனையின் போது ஓ.பி.எஸ்- அவரது மகனுடன் காவி வேட்டி கட்டி இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது. தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் 4 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ஓ.பி.எஸ் வாரணாசிக்கு சென்றது அதிமுக தலைமை மீதான மோதலே காரணம் எனக் கூறப்பட்டது. 

இதனால் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை அதிமுகவினர் மறுத்து வருகின்றனர். ஓ.பி.எஸ் அதிமுகவை விட்டு செல்ல மாட்டார். துணை முதல்வராக இருந்தாலும் அதிகாரம் முழுவதும் எடப்பாடியிடமே இருப்பது அவருக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் பொதுப்பணிதுறையை வாங்கிக் கொண்டு சமமான அதிகாரப்பகிர்வு வேண்டும் என கேட்டு வருகிறார். அதற்கு பாஜக தலைவர்களிடம் இருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நெருக்கம் காட்டுகிறார். அத்தோடு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்பதும் அவரது திட்டம். இதனால் தான் பார்ட் டைம், பாஜக கட்சி ஆளாக அவர் மாறியதாக கூறுகின்றனர்.