அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கும் நிலையில் நானே நேரில் வந்து துவக்கி வைப்பேன் என்று அறிவித்து அதற்கு தேதியும் ஒதுக்கிய ஓபிஎஸ் அரசியல் சூழல் காரணமாக ஜல்லிக்கட்டி கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். அவரது ஆசை நிறவேறவில்லை.

ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றது முதல் அவர் செய்த பணிகளில் அனைவராலும் பாராட்டப்பட்டது ஜல்லிக்கட்டுகான தடையை நீக்க செயல்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை நிறைவேற்ற டெல்லி சென்ற ஓபிஎஸ் அனைத்து பணிகளையும் அங்கேயே இருந்து முடித்த பின்னர் சென்னை திரும்பும் போது பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது.

ஜல்லிக்கட்டு தடைகள் நீங்கும், காளைகள் துள்ளிக்கொண்டு வரும் நானே நேரில் வந்து துவக்கி வைப்பேன் என்றார். அதே போல் தேதி அறிவித்து சென்றார். ஆனால் போராட்டக்காரர்கள் அனும்திக்காததால் அவர்கள் விரும்பும் தேதியில் பின்னர் நடக்கும் என்று நாகரீகமாக சொல்லிவிட்டு சென்றார்.

அதன் பின்னர் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சை சந்தித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான தேதியை குறித்தனர். பிப்.11 இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் என முடிவு செய்து அதில் முதல்வர் கலந்துகொள்வார் என்று அறிவித்தனர். 

ஓபிஎஸ்சும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள ஆவலாக இருந்தார். ஆனால் திடீர் திடீர் என நடந்த மாற்றங்களினால் ஓபிஎஸ் கனவு தகர்ந்தது. இரண்டாவது முறையும் அவர் அலங்காநல்லூரில் பங்கேற்பது அரசியல் சூழலால் தள்ளிப்போனது.

டெய்ல் பீஸ்: ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு பிரியர். அவரே வீட்டில் சொந்தமாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அவர் 2011 முதல் குடியேறிவிட்டதால் அந்த காளையும் கிரீன்வேஸ் அமைச்சர்கள் இல்லத்தில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் கம்பீரமாக நிற்கிறது.

ஓபிஎஸ் வீட்டில் குவிந்த பத்திரிக்கையாளர்கள் ஓபிஎஸ் வீட்டில் கட்டப்பட்டிருந்த காளையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். தூர நின்று செல்ஃபியும் எடுத்து கொண்டனர்.